தேவைப்பட்டால் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் ரூபாய் 2. 68 கோடி மதிப்பிலான திருப்பெரும்புதூர், பழந்தண்டலம், திருமுடிவாக்கம், வளத்தூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார கட்டிடங்கள், சித்த மருத்துவப் பிரிவு கட்டிடம், பரந்தூர் மற்றும் சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்புகள், மானாமதி புறநோயாளி பிரிவு கட்டிடம் உள்ளிட்ட ஒன்பது புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஆர்த்தி தலைமையில் திருப்பெரும்புதூரில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மாண்புமிகு குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், மருத்துவம் பொது சுகாதார துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நல பெட்டகம், மக்களை தேடி மருத்துவ நல பெட்டகம், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், இயன்முறை சிகிச்சை உபகரணங்கள், புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கினர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் 9புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் இயங்கும் அரசு புற்றுநோய் புற்றுநோய் மருத்துவமனை தற்போது தமிழக முதலமைச்சர் நடவடிக்கைகளால் மிகப் பிரம்மாண்டமான சிறப்புமிக்க ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட உள்ளது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவல் பெரிதாக இல்லை, தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வீரியம் இல்லாததால் தற்போது கட்டுப்பாடு அவசியமில்லை, தேவைப்பட்டால் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.