செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், மாவட்ட துணை சுகாதார பணிகள் இணை இயக்குநர் பரணிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 476 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், சென்னையில் 221 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 500 பரிசோதனைகள் செய்யப்படுகிறது. அதை ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். மாவட்டத்தில் மொத்தம் 400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது, எவ்வளவு பரிசோதனைகள் செய்யப்படுகிறதோ, அதில் 10 சதவீதம் தாண்டும்போது அல்லது தொற்று ஏற்பட்ட இடங்களில் 40 சதவீதத்திற்கும் மேலாக அட்மிஷன் இருக்கிறபோது, அந்த இடத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறைகளில் ஒன்று. தமிழகத்தில் அதுபோன்ற நிலை ஏற்படவில்லை.
தற்போது எடுக்கக்கூடிய பரிசோதனைகளில் 2, 3 சதவீதத்திற்கு உள்ளயே பாதிப்புகள் இருக்கிறது. எனவே, மருத்துவமனைகளில் சேர்வோர் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இது இரண்டுமே அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது” என்று கூறினார்.