கோவை: கடந்த பல மாதங்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 2020இல் இந்தியாவில் நுழைந்த கொரோனா வைரஸ் அதன் பிறகு நம்மை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக நாம் இரண்டு ஆண்டுகளை முழுமையாக இழந்தோம்.
குறிப்பாக ஊரடங்கு உள்ளிட்ட பல காரணங்களால் ஊரே முடங்கியது. அதன் பிறகு வேக்சின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போது தான் நாம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறோம்.
தமிழ்நாட்டிலும் கடந்த 2020இல் கொரோனா பரவல் முதல் அலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் இந்தியா முழுக்க முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்த நிலையில், மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அடுத்த அலை ஏற்பட்டது. இப்படி மொத்தம் மூன்று கொரோனா அலைகள் ஏற்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு மோசமாகவே இருந்தது. மனித இழப்புகள் ஒரு பக்கம் என்றால்.. பொருளாதார பாதிப்புகளும் மற்றொரு பக்கம் மிக மோசமாகவே இருந்தது.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் தான் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. சென்னைக்கு அடுத்து தொழில் நகரான கோவையில் வைரஸ் பாதிப்பு மோசமாக இருந்தது. குறிப்பாக, கொரோனாவில் பிந்தைய காலங்களில் பல நாட்களுக்குச் சென்னையில் வைரஸ் பாதிப்பு குறைந்த போதிலும், கோவையில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருந்தது. இதனால் பல நாட்களுக்குத் தொழில் நகரான கோவையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது.
அதன் பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்தது. கோவை மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் கோவையில் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் பின்னரே கோவையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருந்த நிலையில், இப்போது தொழில் நகரான கோவையில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இதனால் கோவை மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அங்கு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மீண்டும் சுகாதாரத்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், மக்கள் கூடும் இடங்களில் பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தோருக்கு கொரோனா டெஸ்டிங் நடத்தப்பட்டது.
மொத்தம் 462 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குக் கோவையில் 13 பேருக்கு கொரோனா உறுதியானது. இது பார்க்கக் குறைவு போல இருந்தாலும் கூட, கடந்த காலங்களில் கொரோனா அலைகள் ஆரம்பிக்கும் போது இப்படித்தான் மெல்ல வைரஸ் பாதிப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. கோவைக்கு அடுத்து சென்னையில் 8 பேருக்கு உட்படத் தமிழகம் முழுக்க 44 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது சுமார் 269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொழில் நகரான கோவையில் கொரோனாவால் ஏற்கனவே பல தொழில்கள் நஷ்டமடைந்துள்ளன. இதற்கிடையே கோவையில் இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், இது கோவை மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா இப்போது மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் மாஸ்க் அணிவது. கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளது.