சட்டமன்ற நடைமுறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆளுநர் ஆ.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதியே காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றம்சாட்டினார். மேலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்துக்கும் வெளிநாட்டு நிதியே காரணம் என்றும் அவர் கூறினார். அத்தோடு மட்டுமின்றி பேரவை தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால் நாகரீகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என பொருள். வார்த்தை அலங்காரத்துக்காக நிறுத்தி வைப்பு என்கிறோம்; நிறுத்தி வைத்தாலே நிராகரிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம் எனவும் தெரிவித்தார். ஆளுநர் ரவியின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து, நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.