ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் 25 பேர் உயிரிழந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தின் நிலை குறித்து தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான். இந்த உயிரிழப்பையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட உயிர்ப்பலிகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தமிழக முதலமைச்சர் உறுதியளித்தவாறு ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சாய்நகரைச் சேர்ந்த நரசிம்மராஜ் என்ற 32 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பல லட்சம் ரூபாயை இழந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு கடன் சுமை அதிகரித்து விட்ட நிலையில், அவரது வீட்டை விற்று கடனை அடைத்துள்ளார்.
அதன் பிறகும் ஆன்லைன் சூதாட்ட போதையிலிருந்து நரசிம்மராஜ் மீண்டு வராத நிலையில், அவரை மனைவி கண்டித்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த நரசிம்மராஜ், அவரது மனைவி சிவரஞ்சனியை கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்து உடலை வீட்டில் பதுக்கி விட்டு தப்பிச் சென்று விட்டார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் மட்டுமே நிகழ்ந்து வந்த நிலையில், இப்போது கொலைகளும் அதிகரித்து விட்டன. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழும் 25-ஆவது உயிர்ப்பலி சிவரஞ்சனியின் மறைவு ஆகும்.
இவர்களில் சிவரஞ்சனியையும் சேர்த்து மொத்தம் 5 பேர் எந்த பாவமும் செய்யாமல், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் கொலை செய்யப் பட்டவர்கள் ஆவர். ஆன்லைன் சூதாட்டம் தற்கொலைகளை மட்டுமின்றி கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களையும், சமூக சீரழிவுகளையும் ஏற்படுத்துவதற்கு இதுவே உதாரணமாகும்.
தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, இரு வாரக் கெடுவைக் கடந்து கடந்த 27-ஆம் தேதி அதன் அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை மீது அன்று மாலை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது.
அதன்படி அமைச்சரவைக் கூட்டத்தில் வல்லுனர் குழுவின் பரிந்துரை குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதனடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டதாகவும் ஜூன் 28-ஆம் தேதி நாளிதழ்களிலும், செய்தி தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியாயின.
ஆனால், அதன்பின்னர் 12 நாட்களாகி விட்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் குறித்து இப்போது வரை எந்தத் தகவலும் இல்லை. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதா?
அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால் அச்சட்டம் ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதா? ஒருவேளை ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன?
வல்லுனர் குழு பரிந்துரைகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு மக்களிடம் விளக்கமளிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைதியை கடைபிடித்து வருகிறது.
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தின் இன்றைய நிலை குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். அவசர சட்டம் இன்னும் தயாராகவில்லை என்றால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச்சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்.
அதன் பின்னர் அதை ஆளுனருக்கு அனுப்பி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்தை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறூத்தியுள்ளார்.