அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் தனது இணையதளத்தில் கட்டுரைகளும், யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து வந்தார்.
அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். சில விவகாரங்கள் உயர் மட்ட அளவில் சர்ச்சையை எழுப்பியது.
இந்தநிலையில், அண்மையில் யூடியூப் சேனலில் பேசிய சவுக்கு சங்கர், ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பபட்டிருந்த நிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று (செப்.15) மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. தீர்ப்புக்குப் பின், மதுரை சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் நள்ளிரவில் கடலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
நிர்வாக காரணங்களுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.