தர்மசாலா : இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி அதிக சீட்களில் முன்னிலை வகிக்கிறது.
அதேசமயம், வாக்கு சதவீதத்தில் காங்கிரஸை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது பாஜக.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸும், பாஜகவும் இழுபறி நிலையில் மோதி வருவதால், இரு தரப்புக்குமே தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்படும் நிலை நிலவுகிறது.
தற்போதைய நிலையில் எண்ணப்பட்ட வாக்குகளின் படி பாஜக 44 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 42 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. அதேசமயம், சீட் கணக்கில் காங்கிரஸ் கட்சி 36 இடங்களிலும், பாஜக 28 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தின் 68 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின. இமாச்சலபிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 35 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் எந்த கட்சியும் பெரும்பான்மையை எட்டவில்லை. காங்கிரஸ் 36 இடங்களிலும், பாஜக 28 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த தேர்தலில் பாஜக 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், 2 சுயேட்சைகளும் வெற்றி பெற்று இருந்தனர். பாஜகவின் ஜெய்ராம் தாகூர் முதலமைச்சராக இருந்தார். இந்நிலையில், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிந்து ஒரு மாத காலம் ஆகியும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை வகித்தது. தொடர்ந்து அதிக இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வந்த நிலையில், திடீரென காங்கிரஸ் கட்சி முன்னேற்றம் அடைந்தது. தற்போதைய நிலவரப்படி இமாச்சல பிரதேசத்தில் பாஜக 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 36 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
அதேசமயம், தற்போது வரை பெற்றுள்ள வாக்கு சதவீதத்தின்படி, பாஜக முன்னிலையில் உள்ளது. தேர்தல் ஆணைய தகவல்களின்படி, இமாச்சல பிரதேசத்தில் தற்போது வரை என்ணப்பட்டுள்ள வாக்குகளின்படி பார்த்தால், பாஜக 44 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 42 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் 4 சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அவர்களில் மூவர் பாஜகவில் இருந்து சீட் கிடைக்காமல் சுயேட்சையாகப் போட்டியிட்டவர்கள். ஒருவர் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காமல் சுயேட்சையாகப் போட்டியிட்டவர். இவர்களின் வெற்றி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் சில இடங்களில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருப்பதால், அங்கு எந்தச் சுற்றிலும் நிலைமை மாறலாம் என்ற நிலை இருக்கிறது. உதாரணமாக, பிலாஸ்பூரில் காங்கிரஸின் பம்பர் தாக்கூர் பாஜகவின் திரிலோக் ஜம்வாலை விட 7 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இதேபோல், சிந்த்பூர்ணியில் காங்கிரஸின் பல்பீர் சிங் வர்மா, பாஜகவின் சுதர்சன் சிங் பப்லூவை விட வெறும் 9 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றுள்ளார்.