சென்னை: உலக செஸ் சாம்பியனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 16 வயதான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.
இந்தத் தொடரில் இன்னும் 7 சுற்றுகள் உள்ளன. இந்த நிலையில், உலக செஸ் சாம்பியனை வெற்றிக் கொண்ட பிரக்ஞானந்தாவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரக்ஞானந்தா, தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த – தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த #Chess ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது #GrandMaster பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்’ என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.