கோவை வரும் ஆ. ராசா… செல்லும் வழி எங்கும் வெடிக்கும் போராட்டம்… பக்கா பிளான் போட்டு கொடுத்த அண்ணாமலை..!

கோயம்புத்தூர்: திமுக எம்பி ஆ. ராசாவின் பேச்சுக்கு எதிராக பாஜக போராடி வந்த நிலையில் இன்று கோவையிலும் பெரிய போராட்டம் செய்ய பாஜக முடிவு செய்துள்ளது

சனாதனம் பற்றி திமுக எம்பி ஆ. ராசா பேசியதில் இருந்தே தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.ஆ. ராசா தனது பேச்சில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன். இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள். இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார். ஆ. ராசாவின் இந்த பேச்சை தமிழ்நாடு பாஜகவினர், இந்து முன்னணியினர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

ஆ. ராசாவின் பேச்சுக்கு எதிராக பாஜக போராடி வந்த நிலையில் இன்று கோவையிலும் பெரிய போராட்டம் செய்ய பாஜக முடிவு செய்துள்ளது. ஆ. ராசா இன்று கோவைக்கு செல்கிறார். நீலகிரி செல்வதற்காக அவர் கோவைக்கு விமானம் மூலம் செல்கிறார். கோவை சென்று பின்னர் கார் வழியாக நீலகிரி செல்கிறார். இதற்காக அவர் அன்னூர் சாலையை பயன்படுத்த உள்ளார். இங்குதான் பாஜக போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அவர் கோவை வரும் நேரத்தில் சரியாக அவரை வழிமறித்து பாஜக போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளது. பாஜக மாநில விவசாய பிரிவு செயலாளர் ஜி.கே நாகராஜ் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், ஆ. ராசா இன்று கோவைக்கு வருகிறார். அவர் அன்னூர் வழியாக நீலகிரி செல்கிறார். அவர் செல்லும் வழி எங்கும் நாம் போராட வேண்டும்.

அறவழியில் நாம் போராட்டம் செய்ய வேண்டும். பாஜக சார்பாக மக்கள் அனைவரும் இதற்காக களமிறங்க வேண்டும். இந்து சொந்தங்கள் அறவழியில் நம்முடைய எதிர்ப்பை காட்ட வேண்டும். அவருக்கு இன்று நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார். பாஜகவினரின் இந்த போராட்ட அழைப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசை வடஇந்திய தொலைக்காட்சிகளில் விமர்சனம் செய்தார்.

அதன்பின் அவருடைய காரையும் பாஜகவினர் தாக்கினர். அவருடைய காரில் செருப்பு வீசி தாக்கினர். இந்த நிலையில் இன்று ஆ. ராசாவிற்கு எதிராக போராட்டம் செய்வோம் என்று பாஜக அழைப்பு விடுத்து உள்ளது. இதனால் தற்போது கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று பிற்பகல் ஆ. ராசா கோவைக்கு வருகிறார். இதை முன்னிட்டு விமான நிலையத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.