தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவில் புயலாக வலுப்பெற்றது.
இதையடுத்து இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே 75 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னைக்கு தென் கிழக்கில் 640 கிமீ தொலைவில் உள்ள மாண்டஸ் புயல், தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக தமிழகத்தில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்பட 6 மாவட்டங்களில் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.