கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் கோவையில் இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், உறுதி செய்யவும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை, உயர் கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையி பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றலின்றி கல்வியை முடிக்கும் வரையிலும் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், அவா்கள் வேறு கல்வி உதவித் தொகைகளைப் பெற்று வந்தாலும் இந்தத் திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் எனவும் அரசு அறிவித்திருந்தது.
இத்திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் பயின்று அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் தாங்களாகவோ, கல்லூரி மூலமாகவோ இணையதளத்தில், உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம்.
இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மாணவிகள் ஜூலை 7 ஆம் தேதிக்குள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் உலகி, சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இரண்டு மாறுபட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டதால் மாணவிகள் குழப்பமடைந்திருக்கின்றனர்.
அதேநேரம், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பல கல்லூரிகளின் பெயர்களும், பாடப் பிரிவுகளும் இடம்பெறவில்லை. அதேபோல, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட தகவல்களில் திருத்தம் ஏதேனும் இருந்தால் அதை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
இது குறித்து கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் உலகி கூறும்போது, இந்தத் திட்டத்தின்கீழ் பதிவு செய்வதில் கல்லூரிகளும், மாணவிகளும் சில இடர்பாடுகளை எதிா்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்டத்தில் பதிவு செய்வதற்கு ஜூலை 10 ஆம் தேதிதான் கடைசி நாள். எனவே அது வரையிலும் பதிவு மேற்கொள்ளலாம். கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற சுமார் 18 ஆயிரம் மாணவிகள், கல்லூரிகளில் இளநிலை பட்டம் பயின்று வருகின்றனர். இவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் இந்தத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0