தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி… 20 நிமிடம் மூடிய ரயில்வே கேட்… ஆம்புலன்ஸி லேயே பலியான சோகம்..

திருமங்கலம்: திருமங்கலம் அருகே தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடிக்கிடந்ததால் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே விருசங்குளத்தை சேர்ந்த வெள்ளைசாமி மகள் பிரபாவதி(18). இவர் திருமங்கலம் கப்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிகாம் படித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக நேற்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர், அக்கம்பக்கத்தினர் பிரபாவதியை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். திருமங்கலத்திலிருந்து விருசங்குளம் கிளம்பிய 108 ஆம்புலன்ஸ் ரயில்வே கேட் மூடப்பட்டதால் சிக்கி நின்றது.

தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் டூவிலரின் நடுவே பிரபாவதியை அமரவைத்து திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவர்களும் ரயில்வே கேட்டில் சிக்கி நின்றனர். அடுத்தடுத்து ரயில்கள் சென்றதால் 20 நிமிடத்திற்கு பின்பு ரயில்வே கேட் திறக்கப்பட்டது. அதன்பின் ரயில்வே கேட் அருகேயே பிரபாவதியை அவசர அவசரமாக 108 ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.