திருச்சி வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் குறித்து ஆட்சியர் விளக்கம்.

திருச்சி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில் உள்ள வைப்பறைகளில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வைப்பறைக்குள் 4 திசைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வைப்பறைக்கு உள்ளே, வெளியே யாா் சென்று வந்தாலும் கண்காணிக்கும் வகையில் வளாகத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் மொத்தம் 192 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இதன் மூலம் இயந்திரங்களை காணொலி காட்சி வாயிலாக வேட்பாளா்களின் முகவா்கள், அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனா். இதற்கிடையே ஒருசில மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா திடீரென்று செயலிழந்ததாக புகாா்கள் வந்தது. இதையடுத்து திருச்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அதேபோன்று புகாா்களுக்கு இடம் அளிக்காமல் உரிய ஏற்பாடுகளை செய்ய வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு அலுவலா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணும் மையத்துக்கு நேரில் சென்று சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாவட்ட ஆட்சியர் செய்தியாளா்களிடம் கூறும்போது இந்த வாக்கு எண்ணும் மையத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மின்தடை ஏற்பட்டாலோ, மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ கேமராக்கள் 3 விநாடிகளில் இயங்கும் வகையில் ஆட்டோ ஜென்செட் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தடையின்றி கேமராக்கள் இயங்கும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் உடனடியாக முடிவுகளை அறிவிக்கும் வகையில் சிறப்பு மென்பொருள் (என்கோா் தொழில்நுட்பம்) தயாா்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சுற்று முடிவுகளை பெரிய திரையிலும் காண முடியும் என்றாா்.