தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வாக்குச்சாவடி மையம் அமைப்பது, சீரமைப்பு, இடமாற்றம் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அமைப்பது தொடர்பாகவும், சிசிடிவி கேமரா அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னேற்பாடாக, இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வீடியோ சர்வேலன்ஸ் குழு, ஒரு காணொளி தணிக்கை குழு மற்றும் கணக்கு தணிக்கை குழுக்கள் என 27 கணக்கு கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்டுள்ள கண்காணிப்பு குழுக்களில் உள்ள அலுவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பயிற்சி நடைபெற்றது. மேற்கண்டுள்ள பயிற்சியினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் தொடங்கி வைத்து, கண்காணிப்பு குழுக்களில் உள்ள அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கீழ்கண்டுள்ளவாறு விரிவாக எடுத்துரைத்தார்.
1.வீடியோ சர்வேலன்ஸ் குழுக்கள் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் அரசியல் கட்சி/வேட்பாளர்களால் நடத்தபெறும் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை வீடியோவாக பதிவு செய்திட வேண்டும்.
2.தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளை பதிவு செய்த விவரத்தை காணொளி தணிக்கை குழுக்களிடம் வழங்க வேண்டும்.
3. காணொளி தணிக்கை குழுக்கள் பெறப்படும் காணொளிகளை தணிக்கை செய்து மேற்படி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள். இருக்கைகள் மற்றும் கொடிகள் போன்றவற்றை கணக்கீடு செய்து உரிய படிவத்தில் சட்டமன்ற அளவில் அமைக்கப்பட்டுள்ள உதவி கணக்கு தணிக்கை குழுவிடம் தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
4. கணக்கு தணிக்கை குழுக்கள் தேர்தல் செலவீன பார்வையாளர்களுக்கு உதவியாகவும், வேட்பாளர் செலவு குறித்த பதிவேடுகளில் பராமரிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்யதிட வேண்டும்.
5. தேர்தல் செலவீனங்கள் தொடர்பாக அனைத்து நிலையிலும் முறையாக கண்காணித்திட அனைத்து குழுக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
மேற்கண்டுள்ள பயிற்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) திரு.என்.சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திருமதி.புஷ்பலதா, தனி வட்டாட்சியர்(தேர்தல்) திரு.முத்துசாமி, தனி வட்டாட்சியர், உணவுப்பொருள் வழங்கல் திருச்சிராப்பள்ளி(மேற்கு) திருமதி.பா. தமிழ்கனி ஆகியோர் உடனிருந்தனர். திருச்சி செய்தியாளர் H. பஷீர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0