கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி குறு, சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவையில் நாளை நடைபெற உள்ள கதவடைப்பு போராட்டத்துக்கு மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு (ஆர்டிஎப்) ஆதரவு தெரிவித்துள்ளது.
18 தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ சார்பில் உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை அரசு முழுமையாக நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குறு, சிறு நிறுவனங்கள் கதவடைப்பு மற்றும் கோவை டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நாளை (நவ.25) நடக்கிறது.
இப்போராட்டத்துக்கு மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பு (ஆர்டிஎஃப்) ஆதரவு தெரிவித்துள்ளது. ஆர்டிஎஃப் தலைவர் ஜெயபால் கூறும்போது, ‘மின் கட்டண உயர்வு குறு, சிறு ஜவுளித்தொழில் நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.
எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள கோவை, திருப்பூரில் உள்ள 60-க்கும் மேற்பட்ட ஓபன் என்ட் நூற்பாலைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. இதனால் 45,000 தொழிலாளர்கள் ஒருநாள் வோலைவாய்ப்பு இழக்க நேரிடும்’ என்றார். போராட்டத்தில் 25,000 குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக, போசியா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தெரிவித்தார்.