கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அக்கட்சியினர் ஏற்கனவே அறிவித்து விட்டனர். அவர்களும் மனுதாக்கல் செய்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வீடு, வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் கோவை மாநகராட்சிக்கு 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்தது. அ.தி.மு.க. 99 வார்டுகளிலும், தி.மு.க. 74 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. அ.தி.மு.க. ஒரு இடத்தை கூட்டணி கட்சியான தமிழ்மாநில காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது.
அந்த கட்சி வேட்பாளரும் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையிலேயே போட்டியிட இருப்பதாக தெரிகிறது. இதன்மூலம் கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் இரட்டை இலை சின்னம் போட்டியிடுகிறது. அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவதன் மூலம் அதிக வார்டுகளில் வெற்றிக்கனியை பறிக்க அ.தி.மு.க. வியூகம் அமைத்து தேர்தல் பணி செய்து வருகிறது.
தி.மு.க. 74 வார்டுகள் போக மீதமுள்ள 26 தொகுதிகளை தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்கியுள்ளது. தி.மு.க.வினரும் மேயர் பதவியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர். மேயர் கைப்பற்றுவதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
முதல் முறையாக கோவை மேயர் பதவிக்கு மோதிகொள்ளும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க. கட்சிகள் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 69 வார்டுகளில் நேருக்கு நேர் மோதி கொள்ள உள்ளன.
இந்த வார்டுகளில் வெற்றிக்கனியை பறிப்பதில் இரு கட்சிகளுமே முனைப்பு காட்டி வருகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் வியூகங்களை வகுத்து, தங்கள் அரசுகள் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருபெரும் கட்சிகள் 69 வார்டுகளில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.