மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் வாகன ஓட்டிகள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து சென்றால் அவற்றை பறிமுதல் மட்டுமே செய்ய வேண்டும் என்றும், அதற்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை ஊராட்சி கல்லாறு கிராமத்தில் சாலை வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளிடம் ஊராட்சி சார்பில் அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி ஓடந்துறை ஊராட்சிக்குட்பட்ட கல்லாறு பாலம் அருகே இரு சக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.50, இலகு ரக வாகனங்கள், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ரூ.100, சுற்றுலா வாகனங்கள், டிப்பர் லாரி, லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.200 வரை அபராத தொகையாக கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வசூலிக்கப்பட்டு வந்தது.
நேற்று கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் இப்பகுதியில் வாகனங்களில் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என வாகன ஓட்டிகளிடம் நேரில் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், ”கோவை மாவட்டத்திலிருந்து மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு எடுத்துச்செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்களை வனப்பகுதியில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வீசி விட்டு செல்கின்றனர்.
இதனால் வனத்தில் இருக்கும் காட்டு யானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உட்கொள்வதால் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக இச்சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகளை பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துச் செல்லாமல் இருக்க ஊராட்சி நிர்வாகம் அறிவுரை மட்டுமே வழங்க வேண்டும். அவர்களிடம் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்தால்போதும். அபராதம் விதிக்க தேவையில்லை” என கூறினார்.முன்னதாக ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல் அந்த வழியாக சென்ற அரசு பேருந்துகளில் ஏறி பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபால், ராஜலட்சுமி, ஊராட்சி செயலாளர் லட்சுமணன் (பொறுப்பு) உள்பட பலர் உடனிருந்தனர்.