கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக பாஜகவின் நிலைப்பாடு சரியானதே என பாஜக கோவை மாநகா் மாவட்டத் தலைவா் பாலாஜி உத்தமராமசாமி தெரிவித்துள்ளாா். கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக பாஜகவின் நிலைப்பாடு சரியானதே என பாஜக கோவை மாநகா் மாவட்டத் தலைவா் பாலாஜி உத்தமராமசாமி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக அரசே காரணம் என்பதால் காங்கிரஸ் கட்சிதான் இதுகுறித்து கருத்து சொல்ல வேண்டும். கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் பாஜகவின் நிலைப்பாடு சரியானது என தேசிய புலனாய்வு முகமையின் அறிக்கை உறுதிபடுத்துகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் சோந்து முக்கிய வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்குவதற்கு திட்டமிட்டு வந்ததும், ஐஎஸ் அமைப்புடன் 100க்கும் மேற்பட்ட கோவை இளைஞா்கள் தொடா்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. கோவை பொறுப்பு அமைச்சா் செந்தில் பாலாஜி காா் குண்டு வெடித்து 4 நாள்களுக்குப் பிறகே கோவைக்கு வந்து, நடந்தது வெறும் விபத்து என்று கூறிய நிலையில், பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்துள்ளதால் தவறான தகவலை பரப்பியதற்காக கோவை மக்களிடம் அவா் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதேபோல, திமுக தலைவா்களும் என்ஐஏ அறிக்கை குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும். கோவை தாக்குதலில் ஆரம்பம் முதலே பாஜக தலைவா் அண்ணாமலை கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது. அவா்களும் துரிதமாக செயல்பட்டு 45 இடங்களில் சோதனை நடத்தி வலுவான ஆதாரங்களை சேகரித்துள்ளனா். இது பாஜக எடுத்த முயற்சிக்கான வெற்றி எனவும் தெரிவித்துள்ளாா்.