இஸ்லாமாபாத் : எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்பாகவே நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாக். பிரதமராக 2018ல் பதவியேற்றார் முன்னாள் கிரிக்கெட் கேப்டனான இம்ரான் கான். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் முன் வைத்துள்ளன. இதற்கு தேசிய அசெம்பிளி எனப்படும் பாகிஸ்தான் பார்லிமென்டின் செயலகம் அனுமதி அளித்துள்ளது.வரும் 22ம் தேதி பார்லிமென்ட் கூட்டத்தை கூட்டுவதற்கு பார்லிமென்ட் செயலகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 26 – 30க்குள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.இந்நிலையில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பி.எம்.எல்.க்யூ.
எனப்படும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. பஞ்சாப் மாகாண முதல்வரை மாற்ற அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.’பிளாக்மெயில்’ செய்வதாக அந்தக் கட்சி மீது இம்ரான் கானின் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அதையடுத்து கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பரஸ்பரம் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.கூட்டணியில் இடம்பெற்றுள்ள நான்கு கட்சிகளில் இரண்டு கட்சிகள் வெளியேறினால் இம்ரான் கான் அரசுக்கு பார்லி.யில் பெரும்பான்மை பலம் குறைந்துவிடும். இதையடுத்து ஆட்சி பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.