பெய்ஜிங்: கடந்த 1970-ம் ஆண்டுக்குப் பின் 2022-ம் ஆண்டு சீன பொருளாதாரத்திற்கு இரண்டாவது மோசமான ஆண்டாக இருந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிசிபி) உயர்மட்ட அரசியல் தலைவர்களின் கூட்டம் மார்ச் 4ம் தேதி தொடங்கியது. இரண்டு அமர்வுகளாக நடக்கும் இந்த கூட்டம் இரண்டு வாரங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், சீன அரசு 2023ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி இலக்கை கடந்த ஆண்டுகளை விட குறைவாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ராணுவ செலவீனங்களை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா இரண்டாவது முறையாக ராணுவச் செலவீனங்களை அதிகரித்துள்ளது என்று நியூயார்க்கில் இருந்து சீன – அமெரிக்கர்களால் செயல்படும் சர்வதேச ஊடகமான என்டிடி தெரிவித்துள்ளது.
”1970ம் ஆண்டுக்குப் பின் சீனப் பொருளாதாரத்திற்கு 2022-ம் ஆண்டு இரண்டாவது மோசமான ஆண்டாகும். கடுமையான கட்டுப்பாடுகள், பூஜ்ஜிய கோவிட் கொள்கை காரணமாக 2020ம் ஆண்டு பொருளாதாரம் மிகவும் பின்தங்கி இருந்தது” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உயர்மட்ட அரசியல் குழு கூட்டத்தில், மார்ச் 5ம் தேதியுடன் பதவிக்காலம் நிறைவடையும் சீன பிரதமர் லீ கெகியங், தனது கடைசி அரசின் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது, இந்த ஆண்டு சீனாவின் உள்நாட்டு உற்பத்தி அளவு 5 சதவீதமாக நிர்ணயிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இது எதிர்பார்க்கப்பட்ட அளவை விட குறைவு.
கடந்த 2010ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு காலாண்டிற்கும் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. 2010 ம் ஆண்டின் முதல் காலாண்டில் 12.2 சதவீதமாக இருந்த ஜிடிபி வளர்ச்சி 2019ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 6 சதவீதமாக குறைந்தது. சீன அரசின் ஆண்டு அறிகையின் படி, 2021 -2023 இடையிலான மூன்று ஆண்டுகளில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி இலக்குகள் முறையே 6, 5.5, 5 சதவீதங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
2022ம் ஆண்டு குறைவான ஜிடிபி இலக்கே நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் பெருந்தொற்று, பொதுமுடக்கம், சர்வதேச பொருளாதாரம் போன்ற காரணங்களால் எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவாக 3 சதவீதம் மட்டுமே ஜிடிபி எட்ட முடிந்தது.
ரியல் எஸ்ட்டேட் வணிகத்தின் சரிவால் யாரும் புதிதாக வீடுவாங்க விரும்புவதில்லை. இதனால், மூன்றாம், நான்காம் நகரங்களில் ரியல் எஸ்ட்டேட் தொழில் கடும் பாதிப்படைந்துள்ளது. சீனாவின் வளமான கடலோர நகரங்கள்கூட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில்களில் மிகவும் போராடிக்கொண்டிருக்கின்றன.
பெரிய அளவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் நடைபெறும் சீன மாகாணங்களில் ஒன்று ஃபியூஜியான். இங்கு இலகு ரக தொழில்களான காலணிகள், ஆடைகள் மற்றும் உணவு பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், பொருள்களுக்கான ஆர்டர்களைப் பெறுவதில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருவதாக இங்குள்ள பெரும்பாலான உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை நகரங்களான சுஜோ மற்றும் குன்ஷான்-ல் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் புதிய பணியாளர்களை வேலைக்கு எடுப்பதை குறைத்துள்ளன. இங்குள்ள சில நிறுவனங்கள் நாளொன்றுக்கு 200-300 பேரை பணியமர்த்தி வந்த நிலையில் தற்போது, 20-50 பேரை மட்டும் நாளொன்றுக்கு வேலைக்கு எடுக்கின்றன என்று சீனாவின் எக்கனாமிக் அப்ஸர்வர்.காம் என்ற சீன ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அரசின் உயர்மட்ட குழுவின் இரண்டு அமர்வு கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்நாட்டின் புதிய பிரதமர் லீ குயங் தலைமையில் ஒரு பொருளாதாரக் குழுவை நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச்சூழ்நிலையில் சீன அரசு அதன் ராணுவச் செலவினங்களுக்கான தொகையினை உயர்த்தி உள்ளது. இந்தாண்டு ராணுவ செலவீனங்களுக்காக 224 பில்லியன் ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.2 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. தைவான் விவகாரம், உள்நாட்டு பிரச்சினைகள், உலகளாவிய கொந்தளிப்பு போன்ற காரணங்களினால் ராணுவ செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், நிலவிவரும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் சீன அரசு தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 – 2022 வரை சீன அரசு தனது ராணுவ பட்ஜெட்டை முறையே 6.6, 6.8, 7.1 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. உலக வங்கியின் புள்ளிவிபரங்களின் படி, சீனாவின் கடந்த ஆண்டு ராணுவ பட்ஜெட் அந்நாட்டின் ஜிடிபியில் 1.7 சதவீதமாகும். இதற்கு மாறாக உலகின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்காவின் ராணுவ செலவீனங்கள் அதன் ஜிடிபியில் 3.5 சதவீதமாகும்.
இதுகுறித்து, சிசிபியின் மக்கள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த ராணுவ பட்ஜெட் ஒப்பீட்டளவில் குறைவானது மற்றும் நியாயமானதே. அதிகரித்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்காக மட்டும் இல்லாமல் ஒரு பெரிய நாட்டின் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் இது தேவையாக இருக்கிறது” என்றார்.
தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிசிபி அரசின் முக்கிய நோக்கமே உலகின் பிற பகுதிகளில் அழிவினை ஏற்படுத்துவதுதான். ரஷ்யாவிற்கு பொருளாதார ஆதரவு, ரஷ்யா மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க ஆதரவளிப்பது என்பதில் அவர்களுக்கு சரி தவறு என்பதெல்லாம் கிடையாது. சீனாவின் வளங்களில் பெரும்பகுதி ரஷ்ய போருக்காக செலவழிக்கப்படுகிறது என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.