ஜனவரி 13ம் தேதி பொள்ளாச்சியில் குழந்தைகளை கவரும் சர்வதேச பலூன் திருவிழா..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றிலும் தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும்.

அங்கு வீசக்கூடிய தென்றல் தவழக்கூடிய காற்றினையும், இயற்கை அழகு நிறைந்த பகுதியை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் இருந்தும் நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாகவும், உள்ளூர் பொதுமக்களை கவரும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் தனியார் அமைப்பு சார்பில் பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த பலூன் திருவிழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை மேற்கொள்கின்றனர். இது பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பலூன் திருவிழா நடதப்படாமல் இருந்தது. இதனால் பலூன் திருவிழா ரசிக்க முடியாமல் இருந்தனர். இந்த ஆண்டு பலூன் திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வந்த பலூன் திருவிழாவை முதல் முறையாக தமிழக அரசின் சுற்றுலாத்துறை இணைந்து நடத்த உள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிபட்டியில் வருகிற ஜனவரி மாதம் 13-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 3 நாட்கள் பலூன் திருவிழா நடக்க உள்ளது. பலூன் திருவிழா நடக்க உள்ள இடம் அதிகமான காற்று வீசக்கூடிய இடமாகும். இதனால் பலூன்கள் பறப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

13-ந் தேதி தொடங்கும் பலூன் திருவிழாவில் நெதர்லாந்து, வியட்நாம், ஸ்பெயின், அமெரிக்கா உள்பட 9 நாடுகளில் இருந்து பலூன்கள் கொண்டு வரப்பட்டு பங்கேற்க உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் இதில் ஒவ்வொரு நாளும் மக்களை கவரும் விதமாகவும், அவர்களை மகிழ்விக்கும் விதமாகவும் ஒவ்வொரு விதமான இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. குழந்தைகளை கவருவதற்காக பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. பொள்ளாச்சியில் நடைபெறும் பலூன் திருவிழாவை காண்பதற்காக உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலும் இருந்து மக்கள் வருவார்கள்.
தற்போது பலூன் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து தனியார் அமைப்பு நிறுவனம் செய்து வருகிறது. பலூன் திருவிழாவில் உணவு உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகளும் அமைக்கப்படுகிறது. தற்போது அந்த பணிகளும் விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பலூன் திருவிழாவை அரசுடன் இணைந்து நடத்த உள்ள தனியார் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் அடுத்த மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 3 நாட்கள் பலூன் திருவிழா 8-வது ஆண்டாக நடக்க உள்ளது. பலூன் திருவிழாவானது 12-ந் தேதியே ஆரம்பமாகி விடுகிறது. 13-ந் தேதி முறைப்படி திருவிழா தொடங்குகிறது. இந்த திருவிழாவில் 9 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். இந்த பலூன் திருவிழாவில் கனடாவை சேர்ந்த ப்ளூ பியர், பெல்ஜியத்தை சேர்ந்த ஸ்மர்ப், பிரேசிலை சேர்ந்த டினோ என 3 தனித்துவமான பலூன்களும் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்க உள்ளன.குறிப்பிடத்க்க அம்சமாக நெதர்லாந்து பலூனை பெண் விமானியான டிரிண்ட்ஸ்ஜே ஆப்ரிங்கா பறக்க விட உள்ளார். விழாவில் மக்களை மகிழ்விக்கும் விதமாக முதல் நாளில் தைக்குடம் பிரிட்ஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், 2-வது நாளாக ராஜேஷ் வைத்யாவின் ப்யூசன் நிகழ்ச்சி, நித்யா வெங்கட்ராமன், ஆதித்யா ஆர்.கே உள்ளிட்ட பின்னணி பாடகர்களும் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் அரங்கேறுகிறது.
இதுதவிர குழந்தைகளுக்கு பிடித்த, அவர்கள் விளையாடி மகிழும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் பலூன் திருவிழாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.