இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்- போலீசார் அறிவுறுத்தல்.!

கோவையில் வாரந்தோறும் ஹெல்மெட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.

நேற்று கோவை மாநகரில் லட்சுமி மில் சந்திப்பு, நவஇந்தியா சந்திப்பு, அத்திபாளையம் பிரிவு சந்திப்பு, சரவணம்பட்டி சோதனை சாவடி, சரவணம்பட்டி துடியலூர் ரோடு சந்திப்பு, பொள்ளாச்சி ரோடு, எல்.ஐ.சி. சந்திப்பு பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடு, சாய்பாபா கோவில் அருகில், மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற்றது.
இந்த முகாமில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் போக்குவரத்து விதிமுறைகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து வாகன ஓட்டிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 100 சதவீதம் ஹெல்மெட் இலக்கை நோக்கி இது போன்ற முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் வாரங்களிலும் இதேபோன்ற முகாம் நடத்தப்படும். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ. ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்று பள்ளிகள் மூலம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து பள்ளி நிா்வாகம் மூலம் சம்பந்தப்பட்ட பெற்றோா்களுக்கு போலீசார் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகரக் போலீஸ் கமிஷனர், மாநகரில் உள்ள பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வின்போது பள்ளிகளுக்கு குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோா்களில் 60 சதவீதம் போ் மட்டுமே ஹெல்மெட் அணிந்து வருவது தெரியவந்துள்ளது. எனவே குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோா் ஹெல்மெட் அணிந்து வர வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது. இனி வரும் நாட்களில் மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளின் அருகிலும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படும்.
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.