சென்னை: காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மழை, வெள்ள நிலவரம் தொடர்பாக 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் அணைகள் நிரம்பி வழிகின்றன. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர் மழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி, கரூர் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மழை காரணமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எந்த வகையில் உள்ளது? வானிலை ஆய்வு மையம் எவ்வாறான தகவல் தெரிவித்துள்ளன? அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன மேற்கொள்ளப்பட்டிருக்கிறது? என்பது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்துறை சார்ந்த வருவாய் அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தொடர்ச்சியாக மழை அதிகமாக பெய்யும் மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்யவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.