சென்னை : டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் 2-ம் தேதி நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் நாளை பிற்பகல் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெல்லியில் ஏப்ரல் 2-ந் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார். நாளை மாலை மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
ஏப்ரல் 1-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். ஏப்ரல் 2-ம் தேதி திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.