முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் அரசு முறைப் பயணமாக டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.
ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இருநாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல, பயணத் திட்டம் தயாராகி உள்ளது. இந்த பயணத்தின்போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அவ்வாறு சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் ரீதியாக சில தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று டெல்லிக்குச் செல்வது குறிப்பிடத்தக்கது. ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநரும் தமிழ்நாடு முதலமைச்சரும், அடுத்தடுத்து டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.