சிபிஐ விரைவில் தனது வீட்டிற்கு வந்து விடுவார் என்ற அச்சத்தில் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை கடும் விமர்சனம்..!

சிபிஐ அடுத்ததாக தனது வீட்டிற்குத்தான் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் பயப்படுவதுபோல் தெரிகிறது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்..
நேற்று சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று நள்ளிரவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் அவர் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறியதை தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 3 இடங்களில் அடைப்பு இருப்பதால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின், மா. சுப்ரமணியன், சேகர் பாபு உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மத்திய புலனாய்வுத் துறை (CBI)க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, {Delhi Special Police Establishment Act, 1946 (Central Act XXV of 1946)}-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது. கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில் மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டுள்ளது.

இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன்அனுமதியை பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது- முந்தைய திமுக ஆட்சியின்போது மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தத்திற்காக ரூ. 200 கோடி பெற்றுக் கொண்டார் என்று, தமிழக பாஜக கடந்த ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியிருந்தது. இன்றைக்கு தமிழக அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ விசாரணை நடத்த முடியாது என்று ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதைப் பார்க்கும்போது, சிபிஐ விரைவில் தனது வீட்டிற்கு விசாரணைக்கு வரும் என்ற அச்சத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருப்பதைப் போல் தெரிகிறது என்று கூறியுள்ளார்.