வாரணாசியில் புதிய மகாகவி பாரதியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்ச்சியான ‘காசி தமிழ் சங்கமம்’ நடைபெறும் நிலையில், காசி என அழைக்கப்படும் கங்கை கரையில் உள்ள வாரணாசி நகரில் பாரதியார் சிலை திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 11 மகாகவியின் பிறந்தநாளாகும். இந்நிலையில் தற்போது தமிழகத்திலிருந்து பலர் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாரணாசி சென்றனர்.
தனது இளமைப்பருவத்தில் பாரதியார் வாரணாசியில் நான்கு வருடங்கள் வாழ்ந்தார். ஹனுமான் காட் என்கிற பகுதியில் தனது உறவினர் இல்லத்தில் வாழ்ந்த பாரதியார், காசியில் பல வடமொழிகளை மக்களுடன் பேசியே கற்றார் என்பது அவரது மாணவ பருவத்தின் சுவாரசியமான அம்சமாகும்.
காசியில் அவர் வாழ்ந்த இல்லத்தில் உள்ள பாரதியார் அறை நினைவிடமாக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படியே தமிழக பொதுப்பணித்துறை கண்காணிப்பில் அந்த பணி நடைபெற்றுள்ளது. அங்கேயே மகாகவிக்கு மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் காணொளி மூலம் மகாகவி சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ஏற்கெனவே காசி ஹனுமான் காட் பகுதியில் கங்கை கரை அருகில் மகாகவி பாரதியாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
பனாரஸ் நகரில் வாழ்ந்த நாட்களில், சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.தமிழகத்துக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசிக்கும் இடையே உள்ள தொடர்புக்கு பாரதியாரின் நினைவிடம் முக்கிய அம்சமாக அமையும் என கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கங்கையில் நீராடவும், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்யவும் லட்சக்கணக்கோனார் தமிழகத்திலிருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த தமிழகம்-வாரணாசி தொடர்பை கொண்டாட நடைபெறவுள்ள ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார். பிரதமரின் ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்’ சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு மாத காலத்துக்கு ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாட்டின் மிக முக்கியமான மற்றும் பழமையான கற்றல் இடங்களான தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். அறிஞர்கள், மாணவர்கள், தத்துவவாதிகள், வணிகர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் வாய்ப்பளிப்பது இந்த ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்’ தொலைநோக்குத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரு பிராந்தியங்களை சேர்ந்த மக்களும் ஒன்று சேர்ந்து, அவர்களின் அறிவு, கலாச்சாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டு, ஒருவருக்கொருவர் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளும் விதமாக ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கைத்தறி, கைவினைப் பொருட்கள், புத்தகங்கள், ஆவணப்படங்கள், உணவு வகைகள், கலை வடிவங்கள், வரலாறு, சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த ஒரு மாதக் கண்காட்சியும் காசியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் இத்திட்டத்தை செயல்படுத்தும்.
இத்தகைய சூழலில் புணரமைப்பு செய்யப்பட்ட மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தையும் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் நூற்றாண்டு விழா மலரையும் தமிழக அரசு சார்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்