முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69வது பிறந்த நாள். பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் வீட்டில் காலையில் எழுந்ததும் புத்தாடை அணிந்து தந்தையும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்தார் ஸ்டாலின்.
வீட்டில் இருந்த மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். சகோதரிகள் செல்வி கனிமொழி, சகோதரர் தமிழரசு ஆகியோரும் குடும்பத்துடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தனது இல்லத்தில் குடும்பத்துடன் முதல்வர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் காலை ஏழு முப்பது மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் அண்ணா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வைத்து வணங்கினார். அதன்பின்னர் அந்த வளாகத்தில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பூக்கள் தூவி வணங்கினார். தான் எழுதிய சுயசரிதை புத்தகம் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை கருணாநிதி நினைவிடத்திலும் வைத்து வழங்கினார்.
அதன் பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்கினார். பெரியார் திடலில் முதல்வர் ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வாசலில் நின்று மு. க. ஸ்டாலினை வரவேற்பு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பின்னர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறைந்த பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார் ஸ்டாலின். கோபாலபுரம் சென்று தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அங்கிருந்து நேராக சிஐடி காலனிக்கு சென்று ராஜாத்தி அம்மாள் இடம் வாழ்த்து பெற்றார்.
முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் கட்சியினர் அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.