சென்னை: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகாத் ஜரீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12வது மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு 52 கிலோ உடல் எடை பிரிவின் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தாய்லாந்து வீராங்கனை ஜித் போங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். தொடக்கம் முதலே எதிராலி மீது அதிரடி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகாத் ஜரீன், 5-0 என்ற கணக்கில் வென்று தங்க பதக்கத்தை தட்டி சென்றார்.
நிகாத் ஜரீன் தங்கம் வென்றதன் மூலம் உலக செம்பியன் பட்டத்தை கைப்பற்றிய 5வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த நிகாத் ஜரீனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நிகாத் ஜரீன் தங்கம் வென்றதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இனிப்புகளை பகிர்ந்துகொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகாத் ஜரீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜரீனின் வெற்றி அனைத்து இளம் வீராங்கனைகளுக்கு உத்வேகமாக அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.