தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை என்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது களமிறங்கிய நவீன் குமார் என்பவரை காளை, மார்பில் குத்தியதில் படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து சகவீரர்கள் நவீன் குமாரை மீட்டு முதலுதவி அளித்து மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நவீன் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவனியாபுரம் ஜல்லிக் கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த கார்த்தி, செய்தியாளர்களிடம் பேசுகையில், உயிரிழந்த நவீன்குமார் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நவீன்குமாரின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க தயாரான நிலையில், நவீன் குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினரும் உறவினர் களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே மகனான நவீன்குமார் மரணமடைந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றச் சென்ற போது உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த எனது மகனின் உடலை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் கூட வந்து பார்க்க வரவில்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கிறது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடிய எனது மகன் உயிரிழந்ததற்கு நிதி உதவி அளிக்கவில்லை. தமிழக அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி நவீன் குமாரின் தாய் போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அரசு எந்த பதிலும் கூறாமல் இருந்த நிலையில், பலரும் நவீன்குமார் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க கோரி சமூக வலைத்தளங்களில், ‘கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் தான் நிதியுதவியா?’ என்று வைரலாக்கினார்கள்.
இந்நிலையில், அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் (14.01.2025) நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், விளாங்குடியைச் சேர்ந்த திரு.நவீன்குமார் என்ற மாடுபிடி வீரர் மாடு முட்டியதில் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என கூறியுள்ளார்.