சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.6.2022) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுப் பத்திரங்களையும் வழங்கி சிறப்பித்தார்.
மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை ‘சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை’ என மாற்றம் செய்துள்ளது. பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் போன்றவர்களின் நலனை காத்திடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்டங்களுக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள், பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட பெருமுயற்சிகள் மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி சிறப்பாக செயலாற்றிய கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தங்கப் பதக்கமும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,வெள்ளிப் பதக்கமும், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபுசங்கர், வெண்கலப் பதக்கமும் மற்றும் பாராட்டுப் பத்திரங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ஷம்பு கல்லோலிகர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் வே. அமுதவல்லி,சமூகநல இயக்குநர் த. ரத்னா, சமூக பாதுகாப்பு இயக்குநர் ச. வளர்மதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.