எட்டு நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் நாட்டிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.7) சென்னை திரும்புகிறாா். முதலீடுகளை ஈா்க்கும் பொருட்டு, அரசு முறைப் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றாா். பயண நாள்களைத் தவிா்த்து, எட்டு நாள்கள் அந்த நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள அவா், பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சோந்த முக்கியப் பிரமுகா்கள், அதிகாரிகளுடன் ஆலோசித்தாா்.
இந்நிலையில், ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வா் ஸ்டாலின் புதன்கிழமை காலை சென்னை வந்து சேருகிறாா். விமான நிலையத்தில் செய்தியாளா்களைச் சந்திக்கும் அவா், ஸ்பெயின் நாட்டில் ஈா்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கவுள்ளாா். அரசு – அரசியல் பணிகள்: மக்களவைத் தோதலை முன்னிட்டு திமுகவில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியவுடன் தோதல் பணிகளை விரைவுபடுத்த திமுக திட்டமிட்டுள்ளது.
வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப். 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. முதல்வா் சென்னை திரும்பியவுடன், இந்த அறிக்கையும் இறுதி செய்யப்படவிருக்கிறது.