செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: நேரு ஸ்டேடியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!!

சென்னை: நாளை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெற உள்ள சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார்.

உலகமே உற்றுநோக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. 187 நாடுகளை சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் 356 அணிகள், சதுரங்க ஆட்டத்தில் காய்களை நகர்த்த காத்திருக்கின்றன.

இதற்காக, மாமல்லபுரம் பூஞ்சேரியில் 22 ஆயிரம் சதுர அடியில் ஓரு அரங்கமும், 52 ஆயிரம் சதுர அடியில் மற்றொரு பிரமாண்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒட்டி, ஆங்காங்கே, சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. சென்னை நேப்பியர் பாலம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதி வரையிலான வழித்தடத்தில் உள்ள கருப்பு, வெள்ளை பெயின்டிங் மற்றும் ஓவியங்கள், பதாகைள் அனைவரையும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். அரங்கில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சரிடம் அமைச்சர்கள் மெய்யநாதன், எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் விளக்கம் அளித்து வருகின்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.