‘வெல்லும் சனநாயகம்’ என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். மாநாட்டின் தீர்மானங்களை திருமாவளவன் முன்மொழிந்தார். நாட்டின் 2ஆவது தலைநகராக சென்னையை அறிவித்தல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடுதல், ஆளுநர் பதவியை ஒழித்தல் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அமைச்சரவையில் எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அமெரிக்காவைப் போல விகித்தாச்சார அடிப்படையில் இந்தியாவில் தேர்தல் நடத்த வேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்தியில் உள்ள சர்வாதிகார பாஜக அரசை தூக்கி எறிய வேண்டும். தமிழ்நாட்டில் பாஜகவைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. எனினும், இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது. மத்தியில் யார் ஆட்சியில் இருக்க வேண்டுமென அகில இந்திய தலைவர்கள் உணர வேண்டும்” என இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். மாநாட்டில் நன்றியுரை ஆற்றிய திருமாவளவன் ராமர் பக்தியை எதிர்க்கவில்லை எனவும் ராமர் அரசியலையே எதிர்க்கிறோம் எனவும் தெரிவித்தார். “எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினரை ஒருங்கிணைக்கும் இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. எங்களுக்கு ராமர் ஒன்றும் புதிதல்ல. எனது தந்தை பெயரும் ராமசாமி, தந்தை பெரியார் பெயரும் ராமசாமி. ராமரை மையப்படுத்திய அரசியலையே எதிர்க்கிறோம். ஜெய் ஸ்ரீராமுக்கு போட்டியாக ஜெய்பீம் முழக்கத்தை எழுப்புவோம்” எனவும் அவர் தெரிவித்தார்