பதினைந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி மன்னன், ஒரு மனைவியையும் அவரது மகனையும் கொலை செய்துவிட்டு எட்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வந்த நிலையில் சிக்கன் பக்கோடாவால் போலீசில் சிக்கியிருக்கிறார்.
சென்னையில் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் குணசுந்தரி. கணவனை இழந்த இந்தபெண் தனது ஏழு வயது மகனுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார் குணசுந்தரி.
திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. குணசுந்தரியின் நடத்தையிலும் ராஜாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதனால் குணசுந்தரியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்த ராஜா, ஆத்திரத்தில் குணசுந்தரியை அடித்து கொன்றுவிட்டார். அதன்பின்னர் அவரது மகனையும் அடித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.
புது வண்ணாரப்பேட்டை போலீசார் ராஜா மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். 8 ஆண்டுகள் ஆகியும் அவரை பிடிக்க முடியாமல் இருந்தது. போலீசாரின் விசாரணையில் குணசுந்தரி மட்டுமல்லாது 15 பெண்களை ஏமாற்றி ராஜா திருமணம் செய்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து வலை வீசி வந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் சத்தியவேடு பகுதியில் இருக்கும் ஒரு சிக்கன் பக்கோடா கடைக்கு அடிக்கடி ராஜா வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதன் பின்னர் போலீசார் மாறுவேடத்தில் அந்த சிக்கன் பக்கோடா கடைக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார்கள். அப்போது சிக்கன் பக்கோடா சாப்பிட கடைக்கு வந்த ராஜாவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
8 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டிருக்கும் ராஜாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.