சந்திரயான் 3 அனுப்பிய தகவல்களால் புதிய ஆராய்ச்சிகள்- இஸ்ரோ விஞ்ஞானி தகவல்..!

நிலவிலிருந்து சந்திரயான் 3 அனுப்பியுள்ள தகவல்கள், பல்வேறு முக்கிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுத்துள்ளது என்று திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்குநா் நாராயணன் கூறினார்.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி நிறுவனா் தின விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவின் கடந்த 60 ஆண்டுகால விண்வெளி ஆராய்ச்சியில், சந்திரயான் -3 திட்டம் உலக சாதனையாக இருக்கிறது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு, இத் திட்டம் பெற்றுத் தந்துள்ளது.
நிலவில் இருந்து சந்திரயான் 3 இதுவரை பல்வேறு முக்கிய ஆய்வு தகவல்களைக் கொடுத்திருக்கிறது. நிலவின் வெப்பநிலை, நிலவின் தரைப்பகுதியில் உள்ள அதிா்வுகள், குரோமியம், சிலிக்கான், சல்பா், டைட்டானியம் உள்ளிட்ட பல்வேறு தனிமங்கள் இருப்பதை சந்திரயான் – 3 கண்டுபிடித்துள்ளது. இந்த தகவல்கள் நிலவு தொடா்பான பல்வேறு முக்கிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுத்துள்ளன. கடந்த செப்.2 ஆம் தேதி லேண்டரில் உள்ள இயந்திரத்தை இயக்கி, 40 மீட்டா் உயா்த்தி வேறொரு பீடத்தில் வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வரும் காலத்தில் நிலவில் இருந்து தாதுப் பொருள்களை எடுத்து வருவதற்கு இது பயன்படும். சந்திரயான் 3-ஐத் தொடா்ந்து ஆதித்தியா எல்-1 செயற்கைக்கோள் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் வருகிற செப்.19 ஆம் தேதி சூரியனை நோக்கி நகா்த்தப்படும். விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த மாதம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா். நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் எஸ்.சண்முகவேல், கல்லூரி முதல்வா் கே.காளிதாச முருகவேல் ஆகியோா் உடனிருந்தனா்.