சவாலான கட்டத்தில் நிலவை நெருங்கும் சந்திரயான் 3- இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பு..!

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி நிலவை நெருங்கி வரும் நிலையில் , தற்போது சவாலான கட்டத்தை எட்டியிருக்கிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் , திட்டமிட்டபடி நிலவை நெருங்கி வருகிறது. இந்த விண்கலம் நிலவில் தரையிறங்க 40 நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு சுற்றுவட்டப்பாதைகளாக உயர்த்தப்பட்டு , தனது பயணத்தில் ஒரு பங்கு பயணத்தை மட்டுமே மிச்சம் வைத்திருக்கிறது. நிலவில் இருந்து சுமார் 62 ஆயிரத்து 630 கி.மீ தொலைவில் உள்ள சம ஈர்ப்பு விசைப்புள்ளி பகுதிக்கு சந்திரயான் 3 விண்கலத்தை செலுத்தும் 6வது கட்ட பணி இன்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட உள்ளது.

புவியின் ஈர்ப்பு விசையும், நிலவின் ஈர்ப்பு விசையும் சமமாக இருக்கும் பகுதியே சமஈர்ப்பு விசைப்புள்ளி என்று அழைக்கப்படுகிறது. அதாவது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் பணியாகும். இது மிகவும் சவாலான பணி என்பதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நிலவின் ஈர்ப்பு விசை வட்டத்திற்குள் சென்றவுடன், சந்திரயான் 3 விண்கலம் நிலவின் நீள்வட்டப்பாதையில் சுற்றத்தொடங்கும். பின்னர் ஒவ்வொரு சுற்றுவட்டமாக முன்னேறி, ஆகஸ்ட் 25ம் தேதி நிலவின் மேற்பகுதியில் லேண்டர் தரையிரங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.