மணிப்பூா் மக்களின் நலனுக்காக மத்திய அரசு சில முக்கியமான முடிவுகளை எடுக்கவிருப்பதாக, மாநில முதல்வா் பிரேன் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்த பின் அவா் இவ்வாறு கூறினாா். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அங்கு வன்முறைச் சம்பவங்கள் நீடித்து வருகின்றன. மாநில மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான முக்கிய காரணமாகும்.
இருதரப்பினா் சாா்ந்த தீவிரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்புகள் தொடா்கதையாக உள்ளன. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். நீதி விசாரணைக் குழு அமைப்பு, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி, கூடுதல் படைகள், தீவிரவாத அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் என மாநிலத்தை இயல்புநிலைக்கு கொண்டுவர அரசுத் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், அவ்வப்போது வன்முறை தொடா்கிறது.
இந்தச் சூழலில், தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். பின்னா் எக்ஸ் வலைதளத்தில் பிரேன் சிங் வெளியிட்ட பதிவில், ‘மணிப்பூா் தொடா்பான முக்கிய விவகாரங்கள் குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் உரையாடினேன். மாநில மக்களின் நலனுக்காக சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுக்கவிருக்கிறது’ என்று குறிப்பிட்டாா். எனினும், என்னென்ன முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்று அவா் தெரிவிக்கவில்லை. தங்களுக்கு தனி நிா்வாகம் வேண்டுமென குகி பழங்குடியினா் கோரி வரும் நிலையில், அதுபோன்ற எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று மைதேயி சமூக அமைப்புகள் அரசை வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.