நாடு முழுவதும் 115 இடங்களில் சிபிஐ ‘ஆபரேஷன் சக்ரா’ ரெய்டு… 26 சைபர் குற்றவாளிகள் கைது..!

புதுடெல்லி: ‘ஆபரேஷன் சக்ரா’ என்ற பெயரில் 115 இடங்களில் சிபிஐ, மாநில போலீசார் அதிரடி சோதனை நடத்திய நிலையில், 26 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இணைய வழியில் நிதி மோசடி, தகவல் திருட்டு உள்பட பல சைபர் குற்றங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எப்பிஐ கொடுத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் நிதி மோசடி குற்றங்கள் தொடர்பாக டெல்லி, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 87 இடங்களில் சிபிஐயும், 28 இடங்களில் மாநில போலீசாரும் கடந்த 2 நாட்களுக்கு முன் ‘ஆபரேஷன் சக்ரா’ என்ற பெயரில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.1.8 கோடி ரொக்கம், 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் ரூ.1.89 கோடி வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. புனே, அகமதாபாத்தில் போலி கால் சென்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சைபர் குற்றங்கள் தொடர்பாக 26 சைபர் குற்றவாளிகளை சிபிஐ கைது செய்துள்ளது. இதில் 16 பேரை கர்நாடகா காவல்துறையும், 7 பேரை டெல்லி காவல்துறையும், இருவரை பஞ்சாப் காவல்துறையும், ஒருவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் காவல்துறையும் கைது செய்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது. இவர்கள் மீது இணையத்தைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக 11 வழக்குகளைப் சிபிஐ பதிவு செய்து உள்ளது.