கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பேபி (வயது 68) இவரது பேத்தி திரிஷ்னா (வயது 9) இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி பொருட்கள் வாங்க வெளியே சென்றார். அவர்கள் இருவரும் வடகரா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு பேபியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். திரிஷ்னா கோமா நிலைக்கு சென்றார். இதுகுறித்து கோழிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் வெள்ளை நிற கார் விபத்தை ஏற்படுத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோழிகோடு மாவட்டம் முழுவதும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை தணிக்கை செய்தனர். மேலும் விபத்து நடந்த பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். ஆனால் போலீசாரால் கண்டு பிடிக்க முடியாமல் திணறினர். அப்போது விபத்தை ஏற்படுத்திய கார் கண்டிப்பாக பழுது பார்க்க மெக்கானிக் சென்டருக்கு சென்று இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் மாவட்ட முழுவதும் உள்ள மெக்கானிக் சென்டர்களில் சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்குறிய காரை போலீசார் கண்டு பிடித்தனர். அந்த கார் குறித்து போலீசார் விசாரித்த போது அந்த கார் ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரிந்து வரும் கோழிக்கோட்டை சேர்ந்த ஷஜீல் என்பரது என்றும், கார் சுவற்றில் மோதி சேதமடைந்ததா கூறி பழுது பார்க்க விட்டு இருந்ததும் தெரிந்தது. மேலும் அவர் விபத்து ஏற்படுத்தி விட்டு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு தப்பி சென்று இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஷஜீல் காரில் செல்லும் போது குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கவன குறைவாக விபத்தை ஏற்படுத்தி பயத்தில் நிற்காமல் சென்றதாக குடும்பத்தினர் கூறினர். தொடர்ந்து போலீசார் ஷஜீலை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையம் வரும்படி அறிவுறுத்தினர். ஆனால் பல மாதங்களாகியும் அவர் வராததால் போலீசார் அவர் மீது லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்தனர். தொடர்ந்து அவரது கார் பதிவயைும், ஓட்டுனர் உரிமையையும் ரத்து செய்ய போக்குவரத்து பிரிவுக்கு பரிந்துரை செய்தனர். இந்த நிலையில் ஷஜீல் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கோழிக்கோடு செல்ல இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோழிக்கோடு போலீசார் கோவை விமான நிலையம் விரைந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் ஷஜீல் விமானத்தில் இருந்து இறங்கியதும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோழிக்கோடு அழைத்து சென்றனர். கேரளாவில் மிகவும் பேசப்பட்ட இந்த விபத்தில் ஒரு வருடத்திற்கு பின்னர் வெளி நாடு தப்பி சென்ற நபரை கேரளா போலீசார் கோவையில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0