செல்லிடப்பேசி மூலம் முத்தலாக் கொடுத்த கணவர் மீது வழக்குப்பதிவு.!!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு செல்லிடப்பேசி வாயிலாக முத்தலாக் கொடுத்த கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் குன்குரி காவல் நிலையத்தில் முத்தலாக் தடைச் சட்டப் பிரிவு 4-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தனது கணவர் செல்லிடப்பேசி வாயிலாக முத்தலாக் கொடுத்ததாக ஒரு பெண் புகார் அளித்தார். 2007இல் இஷ்தியாக் அலாம் என்பவரை மணம் முடிதுள்ளார். குழந்தை பெற்றடுக்காததைக் காரணம் காட்டி அவரது கணவர் மற்றும் மாமனாரால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரசவக் காலத்தின்போது சிறிது நாள்கள் தங்குவதற்காக தனது தாயின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பிறகு ஒருநாள் தன்னை திரும்பவும் அழைத்துச் செல்வதற்காகக் கணவரை தொலைப்பேசியில் அழைத்துள்ளார். அப்போது அவரது கணவர் முத்தலாக் கொடுத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்” என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தப் பெண்ணின் கணவர் இவருடன் சிறிது காலம் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்திருக்கிறார். மேலும் அவர் வேறொரு பெண்ணை மணம் முடித்ததாக சொல்லப்படுகிறது.

இஸ்லாமிய பெண்களின் நலனுக்ககாக மத்திய அரசு முத்தலாக் தடைச் சட்டததை 2019இல் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.