சீமான், சாட்டை துரைமுருகன் இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் எஸ்பி வருண்குமார் மீது அவதூறாகப் பதிவிட தூண்டியதாக திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்திப் பேசினார் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன். இதனால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அப்போது சாட்டை துரைமுருகனிடம் இருந்து செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இந்த செல்போன்கள் அவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியின் பல்வேறு உள்விவகாரங்களை சீமான் உள்ளிட்டோர் செல்போனில் பேசிய பேச்சுகளின் ஒலிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து வெளியாகின. இது நாம் தமிழர் கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமது செல்போனில் இருந்துதான் திருச்சி எஸ்பி வருண்குமார் திட்டமிட்டே இந்த பதிவு செய்யப்பட்ட போன் உரையாடல்களை வெளியிட்டு வருவதாக சாட்டை துரைமுருகன் குற்றம் சாட்டினார். அத்துடன், திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக சீமான் பொதுவெளியில் பகிரங்கமாகவும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்தும் எச்சரிக்கை விடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதற்கு உடனுக்குடன் சமூக வலைதளங்களில் எஸ்பி வருண்குமார் பதில் கொடுத்ததுடன் வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் வந்தார். இந்த நிலையில் எஸ்பி வருண்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை திருச்சி தில்லை நகர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மீதும் திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து அவதூறாகப் பதிவு செய்ய சீமான், சாட்டை துரைமுருகன் இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் தூண்டிவிட்டதாக திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். மூன்று பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளதால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என போலீசார் கூறுகின்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0