டெல்லி: தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடர்பாக வாக்குறுதிகளை வழங்குவதற்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் இன்று உத்தரவு பிறப்பித்தது.
இலவசங்கள் வழங்குவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அளிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்டவையும் இணைந்துள்ளன. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது. தலைமை நீதிபதி பணியில் இருந்து என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெற உள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் இதுவரையில் நடைபெற்ற விசாரணையில், இலவசங்களுக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது; இரண்டையும் வேறுபடுத்தி அடையாளம் காண வேண்டும்; மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரிலான இலவசங்கள் கிராமப்புறங்களில் பயனளிக்கிறது என்கிற கருத்தை நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும் தேர்தல் பிரசாரங்களின் போது, நடத்தை விதிகள் அமலில் உள்ளன; அப்படியான ஒரு சூழ்நிலையில் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்குவதை ஏன் ஒழுங்குபடுத்த முடியாது? தேர்தல் ஆணையம் இதனை ஏன் செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அத்துடன், இலவசங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு வல்லுநர் குழுவையும் அமைக்கலாம் என்கிற யோசனையையும் நீதிபதிகள் முன்வைத்தனர். மத்திய அரசானது இது தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏன் ஏற்பாடு செய்யக் கூடாது? எனவும் கேள்வி எழு9ப்பியது உச்சநீதிமன்றம்.
இவ்வழக்கில் திமுகவின் இடையீட்டு மனு மீது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீங்கள் மட்டும் பெரிய அறிவாளி கட்சியா? நாங்கள் கருத்து எதுவும் தெரிவிக்காவிட்டாலும் உங்கள் அமைச்சர்கள் என்ன பேசுகிறார்கள் என கவனித்து கொண்டுதான் இருக்கிறோம் என கூறிதும் சர்ச்சையானது.
இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் முன்பாக இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. இலவசங்கள் தொடர்பாக விரிவான விசாரணை தேவைப்படுகிறது; ஆகையால் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிடப்பட்டது.