அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க முடியாது-சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சென்னை: நெடுஞ்சாலை துறையில் நடந்த 692 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் வெளியிட அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

தமிழகத்தில் 2019 முதல் 2021ம் ஆண்டுகளுக்கு இடையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில், நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போட்டதன் மூலம் ரூ. 692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சமுக ஊடகங்களில் அறப்போர் இயக்கம் தரப்பில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் அறப்போர் இயக்கம் செய்திகளை வெளியிட்டு வந்தது. இதனை அடுத்து, அறப்போர் இயக்கம் என்ற அமைப்புக்கு தடை விதிக்க கோரி முன்னாள்முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் அவதூறு ஏற்படுத்திய அறப்போர் இயக்கம் ஒரு கோடியே 10 ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

உண்மைக்கு புறம்பான, உறுதிபடுத்தப்படாத, உண்மைக்கு புறம்பான தகவல்களை இந்த அமைப்பு பரப்புவதாகவும், எனவே அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஏற்கனவே இந்த குற்றச்சாட்டுக்கள் பொதுவெளிக்கு வந்து விட்டதாக தெரிவித்தார். எனவே, அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவிட்டார்.

அறப்போர் இயக்கத்தின் மீது தடை விதிக்க மறுத்தாலும், அந்த இயக்கம் அளிக்கும் பதிலை பெற்ற பிறகு, மனு விசாரிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி , மனுவின் மீதான விசாரணையை ஆகஸ்ட் 11ம்தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

அதேசமயம், நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அறப்போர் இயக்கம் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பதிவிட்டால், அதை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படியும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.