இடைத் தேர்தல்: பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் ஈரோடு வருகை..!

ரோடு: இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 2 கம்பெனி மத்திய படை வீரர்கள் ஈரோடு வந்தடைந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும் குழப்பங்களுக்கு இடையே அதிமுகவின் வேட்பாளராக தென்னரசு களமிறங்கி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது தேர்தல் பிரசாரங்கள் அங்கு சூடுபிடித்துள்ளன.

முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முற்றுகையிட தொடங்கி விட்டனர். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் திருவிழா போன்று காட்சியளிக்கிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 2 கம்பெனி மத்திய படை வீரர்கள் ஈரோடு வந்தடைந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மொத்தம் 2 கம்பெனியை சேர்ந்த 180 வீரர்கள் வந்தனர். இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் மத்திய படைவீரர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து இந்தோ- திபெத்திய பாதுகாப்பு படை வீரர்களும் ஈரோடு வர உள்ளனர்.