பந்து வீசும் போது மடங்கிய பும்ரா கால்… அடுத்த போட்டியில் ஆடுவாரா..? ரசிகர்கள் நிம்மதி..!

கொழும்பு : இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது முதல் ஓவரிலேயே பந்து வீசி முடித்து ஓடிய போது பும்ரா தன் காலை வளைத்து வலியில் துடித்தார்.

அப்போது ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர். எனினும், அவரை தொடர்ந்து பந்து வீச வைத்து சமாளித்தது இந்திய அணி.

இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது.

ரோஹித் சர்மா மட்டுமே 53 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு ஆறுதல் அளித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப இந்திய அணி ஒரு கட்டத்தில் 186 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது. அக்சர் பட்டேல் கடைசி விக்கெட் வரை நின்று 26 ரன்கள் குவித்தார். இந்திய அணி 213 ரன்கள் எடுத்தது.

அடுத்து 214 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது இலங்கை அணி. முதல் ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை வீசிய பின் அவர் ஓடிய போது தன் காலை வளைத்துக் கொண்டார். வலியில் இருந்தாலும் சமாளித்து விட்டார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தங்கள் பதற்றத்தை இணையத்தில் வெளிப்படுத்தினர். ஆனால், அதன் பின் தொடர்ந்து ஐந்து ஓவர்கள் வீசிய பும்ரா அதில் 2 விக்கெட்களையும் வீழ்த்தி இந்திய அணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தினார்.

ஆனால், ஐந்து ஓவர்கள் வீசி முடித்த பின் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் காலை பரிசோதிக்கவே அவர் வெளியேறியதாக கூறப்பட்டது. சில நிமிடங்கள் கழித்து அவர் மீண்டும் பந்து வீச வந்த உடன்தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

பும்ராவுக்கு பெரிய காயம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்றே இந்திய அணி வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனாலும் அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வில் இருக்கக் கூடும். அவருக்கு பதில் முகமது ஷமியை இந்திய அணி ஆட வைக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.