சத்தியமங்கலம், அக்.27: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புல எண் 223/3 ல் உள்ள கீழ்பவானி கிளை வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நீர்வழி ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணி நடைபெற்றது.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுபத்ரா தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி சத்தியமங்கலம் தாசில்தார் மாரிமுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள 16 வீடுகளில் கிளை வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட பகுதியை மட்டும் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அப்போது வீட்டின் உரிமையாளர்கள் வீடுகளை இடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் நீதிமன்றம் உத்தரவின் படி அகற்றப்படுவதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாலை 5 மணி வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.