காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில், கடந்த திங்கட்கிழமையன்று பட்ஜெட் மீதான சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில், நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பாகெல் முதல்வராக உள்ளார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக, அம்மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
முன்னதாக, பூபேஷ் பாகேல், விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்கான பல நடவடிக்கைகளை எடுத்திருந்தார். மேலும் தெருவில் சுற்றுத்திரியும், கால்நடைகளின் பிரச்சினையை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுத்தார். மேலும் அவர் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கையாக, கிராமப்புற பொருளாதாரத்திற்கான உதவிகளை அறிவித்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு, மாடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகளிடம் இருந்து மாட்டு சாணத்தை கொள்முதல் செய்வதாக அம்மாநில அரசு அறிவித்தது. இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட முதல் மாநிலமாக சத்தீஸ்கர் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசின் திட்டமான, ‘கோதன் நியாய் யோஜனா திட்டம்’ மூலம் மாட்டு சாணத்தை கொள்முதல் செய்வதால் கால்நடை வளர்ப்போருக்கு வருமானம் கிடைத்திட வகை செய்யும். மேலும் மண்புழு உரத்திற்கான மூலாதாரமாக மாட்டுச்சாணம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதன்காரணமாக, மாநிலத்தில் ரசாயன உரங்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்று மாநில அரசு தெரிவித்து இந்த திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.