திருச்சியில் உள்ள பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.

கடந்தஒரு மாத காலமாக திருச்சியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே பலத்த சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயழலிப்பு நிபுணர்கள் அது பொய்யானது என்பதை உறுதி செய்தனர். பிரபல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில், உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும். இது வெறும் மிரட்டல் அல்ல நாளை மாலை நிச்சயம் குண்டு வெடிக்கும். இரண்டு பள்ளிகளிலும் நாளை மாலை வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பதட்டம் அடைந்தனர். வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் விரைந்து வந்து பள்ளி முழுவதும் சோதனை நடத்தி அது புரளி என உறுதி செய்தனர். கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில் யார் இதை அனுப்புகிறார்கள் என காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஆர்.கே.பி.எஸ் பப்ளிக் பள்ளி, தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு பள்ளி, அதன் அருகே உள்ள ராஜாஜி வித்யாலயா ஆகிய 4 சிபிஎஸ்இ பள்ளிகள், மெயின் கார்டு கேட் பகுதியில் உள்ள ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரி ஆகியவற்றுக்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் திருச்சி மாநகர போலீஸ் சார் அந்தந்த பள்ளி, கல்லூரியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அந்தந்த பள்ளிகள், கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை பகுதியில் உள்ள சந்தானம் வித்யாலயா பள்ளி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் கடந்த மாதம் இதே போல் இமெயில் மற்றும் கடிதம் மூலம் 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. விபிஎன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவதால் மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டறிய முடியாமல் திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் திணறி வருகின்றனர். இதனால் சென்னை சைபர் க்ரைம் போலீசாருக்கு அந்த இமெயில் முகவரிகளை ஏற்கெனவே அனுப்பி வைத்தனர். ஆனால் இதுவரை அதில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இது தமிழக சைபர் க்ரைம் போலீஸாருக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரும் சவாலாகவே உள்ளது. தொடர்ந்து பள்ளிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற செய்தியால் பொதுமக்களும் மாணவர்களும் அச்சத்தில் உறைந்து போயினர் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.