கடந்த சில மாதங்களாகவே பாஜக மற்றும் திமுக பிரமுகர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது என்பதும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.
குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் பாஜக மீது நேரடியாக குற்றம் சாட்டி வருவதும் அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்து வருவதும் தொடர்கதை ஆகியுள்ளது.
இந்த நிலையில் பாஜகவின் மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா நேற்று நள்ளிரவில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தியது, வதந்தி பரப்பியது உள்பட ஐந்து பிரிவுகளின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எஸ்ஜி சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் பாஜகவினர் காவல் ஆணையர் அலுவலகம் முன் திடீரென குவிந்ததாகவும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது .
சென்னை தி நகரில் உள்ள எஸ்ஜி சூர்யா வீட்டில் நேற்று நள்ளிரவு அவர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.